அடே !! மகனே பாலு !! உனக்கு லெட்சுமி வேணுமா ? இல்ல சரஸ்வதி வேணுமா ?--யோசிச்சு பதில் சொல்லு தம்பி-- ஒரு கண்டிப்புள்ள தந்தை தனது மகனைப் பார்த்து கேட்ட கேள்வியின் அர்த்தம் என்ன ? நேயர்களின் கனிவான கவனத்திற்கு !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
எனது இனிய காலை வணக்கங்கள்
உரித்தாகுக !!
அது 1974 ம் ஆண்டு. அப்போது
எனக்கு வயது 2௦ முடிவுற்று 21ன்
துவக்கத்தில் நான் எனது கால்
பதித்த காலகட்டம். ஆனால்
அப்போதே எனக்குத்
திருமணத்திற்கு பெண் பார்க்கும்
படலத்தை எனது தாய்,தந்தையர்
துவக்கிவிட்ட நேரம் அது. நான்
எனது தந்தையின் நிறுவனமான
மோட்டார் சாமான்கள் விற்பனை
செய்யும் கடை ஒன்றினில்
வாடிக்கையாளர்கள் கேட்கும் உதிரி
பாகங்களை எடுத்து தந்து
வியாபாரம் செய்திடும் ஒரு
விற்பனை ஆளாகப்
பணியமர்த்தப்பட்டேன். ஏன், என்ன
காரணம் ? எனக்கு படிப்பு சரியாக
வரவில்லை என்ற காரணத்தினால்.
உயர்நிலைப் பள்ளியில் இறுதி
வகுப்பான S.S.L.C.ல் பாஸ்
பண்ணுவதற்கு எவ்வளவு
குறைவான மதிப்பெண்கள் பெற்றிட
வேண்டுமோ அதை மிகச் சரியான
அளவில் பெற்றதினால்தான்
என்னால் அந்தத் தேர்வினில்
வெற்றிபெற முடிந்தது.
மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா
நேயர்களே ? 6௦௦ க்கு 26௦ அப்படி
இருந்த போதிலும் என்னை மிகுந்த
சிரமப்பட்டு, மதுரை கல்லூரியில்
புகுமுக வகுப்பினில் இடம் பெற்றுத்
தந்தார் எனது தந்தை அவர்கள்.
எனக்கு மிக நன்றாகவே தெரியும்
இந்தக் கல்லூரி படிப்பு நமக்கு
பாதியிலேயே நிறுத்தப்படும் என்று.
எப்படி என்றால் அந்த வயதிலேயே
நான் ஜோதிடம் கொஞ்சம்,
கொஞ்சம் அறிந்து வைத்திருந்த
காரணத்தினால். கடைசியில் அது
போலத்தான் நடந்தது.(1969ல் இந்த
நிகழ்வுகள் எல்லாம்) அப்போது
கல்லூரியில் மாணவர்கள் சங்கத்
தேர்தல் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு
எதிர் அணியுடன் நடந்த கருத்து
மோதல் மற்றும் அதையடுத்து
ஏற்பட்ட தாக்குதல் , அதனால்
எங்கள் சக மாணவர் ஒருவர்
கடுமையாக தாக்கப்பட்ட அந்த
விஷயத்திற்காக அதனைக்
கண்டித்து அங்கே சாலை மறியல்
போராட்டம். போராட்டத்திற்கு நான்
தலைமை ஏற்று நடத்தியதன்
காரணமாக எனது தகுதிநிலை
அறிக்கை (PROGRESS REPORT)
கல்லூரி நிர்வாகம் எனது
தந்தையின் முகவரிக்கு நேரடியாக
பதிவுத் தபாலில் அனுப்பியதன்
காரணமாக அது அவரது நேரடிப்
பார்வைக்குச் சென்றது. அதை
தீர்க்கமாகப் படித்த தந்தையர் எனது
தந்தையார்,இனிமேல் இவனுக்கு
கல்விக்காக நாம் செலவழிக்கும்
ஒவ்வொரு ரூபாயும் விழலுக்கு
(புல்லுக்கு) இறைத்த நீராகத்தான்
இருக்கும் என்று முடிவெடுத்து
என்னை அவரின் சொந்த
நிறுவனத்தில், மற்ற எல்லா
வேலைக்காரர்களோடு ஒரு
வேலைக்காரனாகவே சேர்த்தார்.
வேலையில் நான் சேர்ந்த நாள்
அன்று அவர் எனக்கு போட்ட
நிபந்தனை, என்ன தெரியுமா
நேயர்களே !! தம்பி !! இது ஒரு
வணிக நிறுவனம். என்னால் எனது
கடினமான உழைப்பால்,
முயற்ச்சியால்,என்னிடம் உள்ள
திறமையால் அது சாத்தியம் ஆனது.
நீ எனது மகன்.நான் உனது தந்தை.
இது எல்லாம் வீட்டில். ஆனால்
இங்கே நீ அந்தப் பாசத்தை
எதிர்பார்க்கக் கூடாது.
அப்போதுதான் உன்னால் இங்கே
தொழிலைக்கற்றுக்கொள்ள முடியும்
என்னைப்பொறுத்தவரையில் நீஒரு
வேலையாள்தான். நான் கேட்கும்
கேள்விகளுக்கு மட்டும் நீ பதில்
சொன்னால் அதுவே எனக்கு
போதுமானது. அதுபோல உன்னிடம்
என்ன வேலையை நான்
சொல்கிறேனோ அதனை மட்டும் நீ
செய்தால் அதுவே எனக்கு போதும்.
என்ன ? புரிகிறதா. இன்று நீ உனது
வீட்டிற்குச் சென்று நன்றாக இன்று
நாள் முழுவதும் யோசி. அதை அந்த
நிபந்தனைகளை நீ
எற்றுக்கொள்பவனாக
இருந்தால்மட்டுமே நாளை முதல் நீ
வேலைக்கு வரலாம்.
NOW YOU CAN GO
என்றாரே பார்க்கலாம். சரி !! நம்ம
தலை எழுத்து. இந்த ஒரு
இடத்தையும் விட்டு விட்டு வேறு
ஒரு முகம் தெரியாத ஆளின்
முன்னால் போய் நின்று ஏச்சு பேச்சு
வாங்கி பொழைப்பு நடத்துறதுக்கு
நம்மைப்பெத்த அப்பா தானே என்ன
திட்டினாலும் திட்டிட்டு போட்டும்
என்று வேலைக்கு சேர்ந்தேன்அன்று
அக்டோபர் மாதம் 1௦ம் தேதி 1969ம்
ஆண்டு. ஆண்டுகள் கடந்தன....
வருடங்கள் உருண்டோடின..... அது
1974ம் ஆண்டு. அப்போது எனக்கு
வயது2௦முடிவுற்று21ன் துவக்கத்தில்
நான் எனதுகால்பதித்த காலகட்டம்
அது. அப்போதே எனக்குத்
திருமணத்திற்கு பெண் பார்க்கும்
படலத்தை ஆரம்பித்துவிட்டனர்
எனது தாய்,தந்தையர் இருவரும்.
இந்த இடத்தில் எனது இளமைக்
கால பழக்கம் ஒன்றினை குறிப்பிட
விரும்புகிறேன். எனக்கு நினைவு
தெரிய ஆரம்பித்த எனது எட்டு வயது
முதற்கொண்டே நான் அடுக்கு
மொழியில் தமிழை எழுதப் பழகிக்
கொண்ட காலம் அது. இந்தப்
பழக்கம்தான் பின்வரும்
காலங்களில் எனக்கு எதுகை,
மோனையோடு வரிகளை அமைத்து
பாடல்களை எழுதிடும் பழக்கத்திற்கு
என்னைப் பக்குவப்படுத்தியது என்று
சொல்லலாம். அதே 1974ம் ஆண்டு
எனது தந்தைக்கு 6௦வயது பூர்த்தி
ஆனதை ஒட்டி அவருக்கு வாழ்த்துப்
பாடல் ஒன்றினை நான் அப்போதே
எழுதி அதனை மதுரைத்
திருவள்ளுவர் கழகப் புரவலர்
பண்டித மீ. கந்தசாமிப் புலவர்
தலைமையில் அரங்கேற்றம்
செய்திருந்தேன். எனக்கு அப்போது
பெண் பார்க்கும் படலம் துவங்கி
விட்டதால், அதனையும் இணைத்து
அந்தப் பாடலில் கீழ்க்கண்டவாறு
படித்திருந்தேன். அந்தபன்னிரெண்டு
சீராசிரிய விருத்தத்தின் (12 பாராவை
கொண்ட) அந்தப் பாடலின் கடைசி
மூன்றே மூன்று விருத்தங்களை
மட்டும்இங்கேநான்குறிப்பிடுகிறேன்
(என் தாய் பார்த்து) (இந்த இடத்தில்
நான் ஏன் தாய் என்று சொல்கிறேன்
என்றால் வழக்கமாக எல்லோரும்
தன்னைப் பெற்றவளைப் பார்த்து
அழைத்திடும் அந்த - - - - என்ற அந்த
புனிதம் மட்டுமே நிறைந்த, தியாகம்
மட்டுமே நிறைந்து வழிந்திடும் அந்த
வார்த்தை, அதாவது அப்பா என்ற
வார்த்தையுடன் இணைந்த
பெண்பாலுக்கு அழைத்திடும் அந்த
வார்த்தை இன்றைக்கு இந்த
நாட்டினில் யார், யாரையோ,
முற்றிலும் சம்பந்தம் இல்லாத
நபர்களைப் பார்த்து அவர்களைக்
குளிர்விக்கும் விதமாக நமது
நாட்டினில் பயன்படுத்திவரும்
காரணத்தால் நான் கடந்த சுமார் 1௦
ஆண்டுகளுக்கும் மேலாக நான்
என்னைப் பெற்றவளைப் பற்றிக்
குறிப்பிடுவது என்று வரும்போது
தாய் என்றே அழைத்து வருவதனை
எனது பழக்கமாகக் கொண்டு
உள்ளேன்.)
அடுப்படியில் நின்நெற்றிவியர்வை
ஆறாய்ப் பெருக்கெடுத் தோடிட-என்
துடிப்பறிந்த தாய் நீதான் உடனே
துணை ஒன்று இளையவன் எனக்கு
எடுத்தேறிப் பார்த்திடத்தான் இங்கே
எத்தனை ஊர்கள் சென்றிட்டீர்!!
அடுத்தடுத்து அழகு மங்கைகளை
அத்தனை விதமாய் பார்திட்டீர்!!
இந்தநல்வேளையில்வந்ததுஅறுபது
வந்தசுற்றம்வாழ்த்திசென்றவுடன்
சிந்தனைவிருந்தாசீர்திருத்தமருந்தா
சின்னவனெனக்கு உற்றதுணைஎடு
அந்த அறுபதாண்டு நிறைவு
விழாவில் கலந்துகொண்ட
அத்தனை உற்றார் உறவினர்
நண்பர்கள் இவர்கள் எல்லோரும்
பாராட்டினாலும் கூட என் தந்தை
முகம் சற்றே இறுக்கமாகத்தான்
காணப்பட்டது. என்ன காரணம்
என்று அப்போது எனக்கு அறிந்து
கொள்ளும் அளவிற்கு அனுபவம்
இல்லை. விழா இனிதே முடிந்தது
எனக்கு பெண் பார்க்கும் படலமும்
தொடர்ந்து வந்தது. நான் கடையில்
வேலை இல்லாத நேரங்களில்
எனது பாடல் எழுதிடும் பணியும்
அவ்வப்போது செவ்வனே
தொடர்ந்தது. இதையும் என் தந்தை
அவ்வப்போது மட்டைப்பந்து
விளையாட்டினில் கடமை ஆற்றும்
நடுவரின் கடைக்கண்பார்வைபோல
கவனித்துக்கொண்டே வந்தார்.
திடீரென்று ஒருநாள் என்ன
நினைத்தாரோ என்னவோ நான்
அறியேன். என்னை அழைத்தார்.
அந்த வரிகளைத்தான் நான் இங்கே
கட்டுரையின் தலைப்பாகத் தந்து
உள்ளேன்.
அடே !! மகனே பாலு !! உனக்கு
லெட்சுமி வேணுமா ? இல்ல
சரஸ்வதி வேணுமா? யோசிச்சுபதில்
சொல்லு !!
என்றார். என் மனம் ஆனந்தக்
களியாட்டத்தில் குதித்து நீச்சல்
அடித்தது. நமக்கு அப்போ இரு
பெண்களைப் பார்த்து உள்ளனர்
தந்தை என்று எண்ணி, மிகவும்
அடக்கமாக , மகிழ்ச்சியை வெளியே
காட்டிக்கொள்ளாமல், எனக்கு
ரெண்டுமே வேணும் என்றேன்.
உடனே என் தந்தை, அடி!!
செருப்பாலே !! நீ என்ன
நினைச்சுகிட்டு பேசுறே!! உன்
கல்யாணத்துக்கு பெண்ணைப்
பற்றிப்பேசுறேன்னுநினைச்சியாலே
அப்டீன்னு சொல்லிட்டு என்கிட்டே
வந்து என் வலது காதை அவரது
கை விரல்கள் பிடித்துக்கொண்டன.
நான் அந்த அர்த்தத்திலே உன்ட்ட
கேக்கலே. உனக்கு வியாபாரம்
பண்ணி அதன்மூலமா பணம்
சம்பாத்தியம் தரும் அறிவு மட்டும்
உள்ள வியாபாரியா இருக்கியா?
இல்ல பாட்டு, வசனம், கதை இப்படி
எழுதி எழுத்தாளன் ஆகி அதன்
மூலம் பணம் சம்பாதிக்கப் போறியா
கேக்கிறேன் என்றார். உடனே நான்
சூழ்நிலையை சமாளித்துக்கொண்டு
நீங்க சொன்ன அதே அர்த்தத்தில
தான் நானும் சொன்னேன் என்றேன்.
இது கதைக்கு வேனா நடக்கும்.
நடைமுறைக்கு உதவாது தம்பி.
ரெட்டை மாட்டு வண்டிலே ஊர்
போலாம் தப்பில்ல. ஆனா ஓட்டுற
ஆள் ஒருத்தர்தான்
இருக்கணும்.அப்பத்தான் வண்டி ஊர்
போய் சேரும்.அதாலே ஒன்னபாட்டு
எழுதிட்டே இரு. கடையிலே உனக்கு
வேலை கிடையாது. இங்கே
இருக்கிறதுன்னா எழுதுற
வேலையை வுட்டுடு என்றார்.
எனக்கு இரந்த வாழ்கையில்
அப்பாவை விட்டா வேறு எந்தப்
பிடிமானமும் இல்லாத
காரணத்தால் அவர்
இருந்தவரைக்கும் (1993 துவக்கம்
வரை )நான் எனது
எழுத்துப்பணியை ஒத்திவைக்க
வேண்டியதாக ஆகி விட்டது
என்பதனை நேயர்ககுக்கு தெரிவித்து
விட்டு கட்டுரையை இந்த அளவில்
நிறைவு செய்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment